ரஜினி கட்சி தொடங்குவார்’.. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் அரசியல் எதிர்பார்ப்பு.. நம்பிக்கையில் மக்கள் மன்ற உறுப்பினர்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு டிசம்பரில், ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கப் போவது உறுதி எனக் கூறி, தன் தேர்தல் அரசியல் பிரவேசத்தை முதல்முறையாக உறுதிப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றத்தின் பெயர், ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர், ஏசிஎஸ்.மருத்துவக் கல்லூரி விழாவில், எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினிகாந்த், தன்னால் எம்.ஜி.ஆர்.ஆட்சியை கொடுக்க முடியும் என குறிப்பிட்டு, மீண்டும் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்
இதனைதொடர்ந்து ஓரிருமுறை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினி, கடந்த மார்ச் மாதம் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் பேசிய போது, தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்படுவது தெரிந்தால்தான், அரசியலுக்கு வருவேன் என்றார்.
அதற்குள் கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துகள் வெளியாகி வந்த நிலையில், கொரோனா காலத்தில் தமது உடல்நிலை வெளியே வந்து மக்களை சந்திக்கும் வகையில் இல்லை என மருத்துவர்கள் கூறியதாக, ரஜினியின் பெயரில் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அதுகுறித்து விளக்கமளித்த ரஜினிகாந்த், அது தன்னுடைய அறிக்கை இல்லை என்றும், ஆனால், அதில் உள்ள தகவல்கள் உண்மை என்றும் கூறினார். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் அவர் கட்சி தொடங்குவாரா? என்பது கேள்விக்குறியானது.
இந்த நிலையில், மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ள ரஜினிகாந்த், 38 மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையொட்டி கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் அம்மன்ற நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தல், கட்சி ஆரம்பிப்பார் என்ற நல்ல செய்தி வரும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரசிகர்கள் நம்பிக்கையை நிறைவேற்றுவாரா ரஜினி?
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகள் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக