ராஜஸ்தான் காஸ்மோ கிளப் சார்பில் மக்களின் இதயங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் “ஸ்மைல் ஸ்டோர்ஸ்” திறப்பு
சென்னை, செப் 20: மனித நேயத்தை காத்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் தனது முதல் சங்கிலித் தொடர் கடையைத் திறந்துள்ளது. “ஸ்மைல் ஸ்டோர்” எனப் பெயரிப்பட்டுள்ள இந்த ஸ்டோரின் திறப்பு விழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ்., பங்கேற்றார். அவர் பேசுகையில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் கடந்த 28 ஆண்டுகளாக மனித நேயப் பண்புகளுடன் பல விஷயங்களைச் செய்து வருகிறது. இப்போது அதன் தொடர்ச்சியாக மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஸ்மைல் ஸ்டோரினைத் திறந்துள்ளது என்றார்.
திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த், திரைப்பட நடிகை கோமல் சர்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர்கள், ராஜஸ்தான் காஸ்மோ கிளப்பின் பணிகளைப் பாராட்டியதுடன், அதனுடைய அனைத்துப் பணிகளுக்கும் துணை நிற்பதாக உறுதி அளித்தனர்.
ஸ்மைல் ஸ்டோர் எப்படி மக்களின் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது குறித்து, ராஜஸ்தான் காஸ்மோ கிளப்பின் தலைவர், மனிஷ் செளத்ரி பேசுகையில், இந்த ஸ்மைல் ஸ்டோர் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே இருக்கக் கூடிய மக்களுக்கு ஒரு தனித்துவம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஸ்டோர்களில் உள்ள துணிகள் நன்கு அலசப்பட்டு, நானோ தொழில்நுட்பம் வழியாக கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுருக்கங்கள் நீக்கி நல்ல முறையில் பேக்கிங் செய்யப்பட்டு இருக்கும். ஒவ்வொரு துணியும் முறையே ரூ.20 மற்றும் ரூ.40 என்ற விலைகளில் இருக்கும். மக்கள் இந்த துணிகளைப் பார்த்து அணிந்து பரிசோதித்த பிறகு வாங்கிக் கொள்ளலாம். இதற்கான வசதி இங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் குறித்து காஸ்மோ கிளப்பின் நிர்வாக அறங்காவலர் சுரேஷ்
குன்டேசா கூறுகையில், கரோனா நோய்த் தொற்றானது ஒவ்வொரு தனிநபரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஆனால், ராஜஸ்தான் காஸ்மோ கிளப்பானது 60 லட்சம் ரூபாய் வரை நிதியை சேகரித்து அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான உதவிகளை அளித்துள்ளது. மேலும்,
காவல் துறையினருக்கு முகக் கவசங்கள், அவசர ஊர்தி வாகனங்கள், தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் என எண்ணிலடங்காத உதவிகளைச் செய்துள்ளது என்றார்.
ஸ்மைல் ஸ்டோர் திட்டத்தின் தலைவர் ஜெகதீஷ் சர்தா கூறுகையில், ஸ்மைல் ஸ்டோர் திட்டமானது அபிஷா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ அபயகுமார் ஸ்ரீஸ்ரீமல் ஆகியோரின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களில் 5 ஸ்மைல் ஸ்டோர்ஸ் திறக்கப்படும் என்றார்.
ராஜஸ்தான் காஸ்மோ கிளப்பின் துணைத் தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர், ஸ்ரீபால் கோத்தாரி கூறுகையில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையானது கடந்த 1992-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. சமுதாயத்தில் வாய்ப்புகள் குறைந்த மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே இந்த கிளப்பின் நோக்கமாகும். ராஜஸ்தான் காஸ்மோ கிளப்பின் முக்கிய திட்டங்களில் ஒன்று துணி வங்கியாகும். இந்த வங்கிக்காக பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய துணிகள் பெறப்படுகின்றன. இந்தத் துணிகள் அனைத்தும் ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள், மனநல மருத்துவமனைகள், பால பவன்கள், முதியோர் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெள்ளம், சுனாமி, தீ விபத்து போன்ற இயற்கை பேரிடர்கள் நேரும் தருணங்கள் என எங்கெல்லாம் துணிகள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் வழங்கப்படுகிறது.
காஸ்மோ கிளப் அறக்கட்டளையானது 3 வகையான முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பழைய துணிகள் சேகரிப்பு: ஓரளவு புதிதாக இருக்கக் கூடிய பயன்படுத்தப்பட்ட துணிகளை வீடு வீடாக அவர்கள் விரும்பும் தேதியில் சென்று பெற்றுக் கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் துணிகள் அனைத்தும் அளவு வாரியாக பிரிக்கப்பட்டு நன்கு சலவை செய்யப்பட்டு இஸ்திரி போடப்படும். அவை பேக்குகளில் அடைக்கப்பட்டு தேவைப்படும் நபர்களுக்கு அளிக்கப்படும். இதுவரையில் 13 லட்சத்து 50 ஆயிரம் துணிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய துணிகள் திட்டம்: சென்னை கிண்டியிலுள்ள புற்றுநோய் மருத்துவமனை,
பார்வையற்றோர் சங்கங்கள், வாய்ப்புகள் குறைந்த மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இதுவரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய துணிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான துணிகள் பண்டிகைக் காலங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது மக்கள் பண்டிகையை எந்தத் தடையும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 2 லட்சம் வரையில் துணிகள்
விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கான சீருடை வழங்கும் திட்டம்: இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சீருடைகள் வழ்கப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக எங்களது வளாகத்தில் குழந்தைகளுக்கு அளவினை எடுத்து அவர்களுக்கு சீருடைகளை தைத்துக் கொடுக்கிறோம். இதுவரையிலும் சுமார் 5 லட்சம் புதிய சீருடைகளை தைத்து வழங்கியுள்ளோம். 130 பள்ளிகளை தத்தெடுத்து அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடையை அளித்துள்ளோம்.
இதன்மூலம் 20 ஆயிரம் குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்துள்ளோம். இந்தத் திட்டத்துக்காக அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளாகப் பார்த்து தேர்வு செய்கிறோம். மிகக் குறைந்த கட்டணத்தில் நடுத்தர வருவாய்க்கும் குறைவான பிரிவைச் சேர்ந்த குடும்பங்களின் குழந்தைகள் படிக்கும் குழந்தைகளைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தேவையான சீருடைகளை அளித்துவருகிறோம் என்றார்.
இரண்டு விருதுகள் பெற்ற குறும்படம் ‘மூடர்’
கருத்துகள்
கருத்துரையிடுக