மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் அமைப்பு சென்னை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து தர ஒப்பந்தம் செய்துள்ளது.
இருதய நோய் பாதிப்புகளால் அவதிப்பட்டு வரும் பச்சிளம் குழந்தைகள் மற்றும் 15 வயதிற்குட்பட்ட சிறார்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில், கடந்த சில ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்ட இலவச இருதய அறுவை சிகிச்சைகள் செய்து கொடுத்துள்ள மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவரான குணால் சௌத்ரி, தற்போது காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் 100 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்து கொடுக்க முன்வந்துள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை காவேரி மருத்துவமனையில் கையெழுத்தானது.
முதல் 10 இருதய அறுவை சிகிச்சைக்கான செலவுக்காக ரவுண்ட் டேபிள் அமைப்பினர் காவேரி மருத்துவமனைக்கு காசோலையை வழங்கினர். நடப்பாண்டில் 100 இலவச அறுவை சிகிச்சை செய்யவும் அடுத்த பத்தாண்டுகளில் ஆயிரம் இலவச அறுவை சிகிச்சை செய்யவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் அடுத்த 4 மாதங்களில் ஏழை எளிய குழந்தைகளுக்கான 100 இருதய அறுவை சிகிச்சையை செய்து முடிப்போம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல திரைப்பட நடிகை பார்வதி நாயர் கலந்து கொண்டு பேசுகையில், இருதய அறுவை சிகிச்சை என்பது அரிதான, அதிகம் செலவாகும் என கருதப்படும் நம் நாட்டில், இதுபோன்ற இலவச இருதய அறுவை சிகிச்சைகள் மூலம் பல நூறு ஏழை எளிய குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.அரவிந்தன் செல்வராஜ் , மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் குணால் சௌத்ரி, ரவுண்ட் டேபிள் இந்தியா ஏரியா 2 தலைவர் கார்த்திக் ரமேஷ் மற்றும் காவிரி ஹார்ட் சிட்டியின் நிர்வாக இயக்குநர் டாக்டர். டி.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் மருத்துவர் சாந்தி, நித்யதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக